vaiko meets thirumurugan gandhi

கடந்த 2 மாதத்துக்கு முன், சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு போலீசார் தடை விதித்தனர்.

போலீசாரின் தடையை மீறி, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து, 4 பேர் மீது. கடந்த மே 28ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த கைதை எதிர்த்து திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதை விசாரித்த நீதிபதிகள், வரும் 30ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் தர உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, சிறையில் உள்ள திருமுருகன் காந்தியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை 9 மணிக்கு இந்தச் சந்திப்பு நடக்கும் எனவும், தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ச்சியாக போராட்டம் நடத்துபவர்கள், குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படுவது குறித்து இருவரும் பேச இருப்பதாக தெரிகிறது.