Asianet News TamilAsianet News Tamil

“வருங்கால வார்ப்புகளான என் இனிய மாணவச் செல்வங்களே...” பரிச்சைக்கு போகும் மாணவர்களை வாழ்த்தும் வைகோ

vaiko greetings for Class XII and Tenth Class Public General Public exam
vaiko greetings for Class XII and Tenth Class Public General Public exam
Author
First Published Mar 1, 2018, 1:12 PM IST


நாட்டின் வருங்கால வார்ப்புகளான என் இனிய மாணவச் செல்வங்களுக்கு எதிர்காலம் ஒளிமயமான அமைய என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,903 பள்ளிகளில், 2,756 மையங்களில் 8 இலட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள்  தேர்வு எழுதுகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்புக்கும் மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்வை 8 இலட்சத்து 61,913 பேர் எழுதுகிறார்கள். மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை 9 இலட்சத்து, 64,441 பேர் எழுதுகிறார்கள்

மாணவ கண்மணிகளை உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இப்பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன. மாணவர்களின் நலன் கருதி பள்ளிப் பொதுத்தேர்வுகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைத்து நடத்திட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் முன்கூட்டியே சென்று பதற்றமும், அச்சமும் இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுமாறு மாணவச் செல்வங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தேர்வுகள் மட்டுமே மாணவர்களின் முழுத்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொணரும் சாதனங்கள் அல்ல. பயிலும் திறனை ஓரளவு தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புதான்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த எவ்வித அழுத்தத்தையும், கெடுபிடிகளையும் திணிக்க முயல வேண்டாம். அப்படிச் செய்தால் விபரீத எதிர்விளைவுகளே ஏற்படும்.  வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் விதைத்து தேர்வுக்கு ஆயத்தப்படுத்துங்கள்.

தேர்வுக்குப் புறப்பட்டுச் செல்லும் மாணவர்களின் வசதிக்காக பேருந்துகளை அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி, ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் அரசு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டுகிறேன்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற குழுவினரோ ஒலிப்பெருக்கியை சத்தமாக இயக்கிடுவதை முற்றாகத் தவிர்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் வருங்கால வார்ப்புகளான என் இனிய மாணவச் செல்வங்களுக்கு எதிர்காலம் ஒளிமயமான அமைய என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios