vaigai dam

தெர்மோக்கோலை தண்ணீரில் மிதக்கவிட்டு காமெடி பண்ணிய அமைச்சர்…நீர் ஆவியாவதை தடுக்கிறாராம்…

வைகை அணையில் குறைந்த அளவே நீர் உள்ளதால் அது ஆவியாவதை தடுக்க தண்ணீரில் தெர்மோக்கோல் அட்டைகளை அமைச்சர் செல்லூர் ராஜு மிதக்கவிட்டார். ஆனால் 5 நிமிடங்களில் தெர்மோக்கோல் அட்டைகள் சுவற்றில் அடித்த பந்தைப் போல மீண்டும் கரையில் ஒதுங்கின.

வைகை அணையின் நீர் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை அணையில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதால் , அது ஆவியாகாமல தடுக்க தண்ணீர் மேல் தெர்மோக்கோல் அட்டைகளை மிதக்கவிடும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவில் தெர்மோக்கோல் அட்டைகள் வாங்கப்பட்டு நேற்று வைகை அணைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த அட்டைகளை செல்லோ மேப் மூலம் இணைத்து அமைச்சர் செல்லூர் ராஜு தண்ணீரில் மிதக்க விட்டார். மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்களும் இந்த விழாவில் பங்கேற்று அட்டைகளை மிதக்க விட்டனர்.

மேலும் அந்த அட்டைகள் படகுகள் மூலம் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மிதக்க விடப்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில் மிதக்க விடப்பட்ட அனைத்து அட்டைகளும் சுவற்றில் அடித்த பந்தைப் போல மீண்டும் கரைக்கே திரும்பி வந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சரும், அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்துப் போயினர். இந்த நிகழ்வு பெரும் காமெடியாக முடிந்தது.

பொதுவாக வெளிநாடுகளில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க நீர்பரப்பு முழுவதும் பிளாஸ்டிக் பந்துகளை மிதக்க விடுவார்கள். தற்போது இந்த தெர்மோக்கோல் அட்டைகள் நீரில் ஊறி முட்டை போன்று உதிர்ந்து விடும் என்பதால் மீன்கள் மற்றும் பறவைகளுக்கு அவைகள் ஆபத்தை விளைவிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

திட்டம் ஒரு புறம் தோல்வி அடைந்தாலும் 10 லட்சம் ரூபாய் அரசு பணம் வீணாகிவிட்டதே என புலம்பித் தவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.