இடைத் தேர்தல் ரத்து குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், “தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பாஜக இங்கு நிலவுகிற அசாதாரண சூழலில் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது” என்று தெரிவித்தார்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க போராட்ட அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள மன்னார்குடிக்கு இரா.முத்தரசன் நேற்று வருகைத் தந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்கலுக்கு அளித்த பேட்டி:

“பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதை காரணம் காட்டி சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எந்த இடைத் தேர்தல் என்றாலும் பணப் பட்டுவாடாவில்தான் வெற்றிகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.

இதை தடுப்பதற்கும், பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அதற்கு மாறாக இடைத் தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில மாதங்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் தேர்தலை நடத்தும்போது பணப்பட்டுவடா இருக்காது என்பதற்கு எதாவது உத்தரவாதம் உண்டா? என்றால் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு பிறகு பாஜக என்ன அரசியலை விரும்புகிறதோ அதைதான் இங்கு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பாஜக இங்கு நிலவுகிற ஒரு அசாதாரண சூழலில் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது.

இந்த இடைத் தேர்தலை ரத்து செய்தது ஏற்புடையது அல்ல, தேர்தலை நடத்தியிருக்க வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தாகும்” என்று பேட்டியளித்தார்.

இந்தப் பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலர் வை.செல்வராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் மகேந்திரன், ஏஐடியூசி நிர்வாகி ஏ.பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.