தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் பாமக பெரும்பான்மை ஆதரவுடன் இருப்பதால், தேர்தலை நிறுத்த திமுகவினர் தங்களது கவுன்சிலர்களை காணவில்லை என்று நாடகமாடுவதாக பாமவினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 22ம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நகராட்சி, பேரூராட்சிகளிலும் பாதிக்கு மேல் திமுக கூட்டணியே வென்றது.
தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மார்ச் 2 ஆம் தேதி பதவியேற்றனர். இந்நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனிடையே 20 மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பெயர்களை நேற்று திமுக வெளியிட்டது. கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பொதுவாக இன்று போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்ப்பு இன்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனாலும் சில நகராட்சிகளில் இரண்டு பேர் நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் வாக்கெடுப்பு முறையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் சில இடங்களில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட திமுகவினரே எதிர்த்து போட்டியிட்டுள்ளனர். இதனால் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டதால் சர்ச்சையை எழுந்துள்ளது. இதுக்குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். தேனி, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சித் தலைவருக்கான மறைமுக தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக கூட்டணியை சேர்ந்த 3 கவுன்சிலர்களை காணவில்லை என திமுகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் பாமகவினர் அந்த பேரூராட்சியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றுள்ளதாகவும், தேர்தலை நிறுத்த திமுகவினர் நாடகமாடுவதாக பாமவினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
