Asianet News TamilAsianet News Tamil

நட்ட விவசாயிகளே வேரோடு பிடுங்கி வீசும் அவல நிலை…

uprooted and-swept-the-plight-of-farmers-planting
Author
First Published Dec 14, 2016, 10:51 AM IST


குடிமங்கலம்,

தக்காளியின் விலை தொடந்து சரிந்துக் கொண்டே இருப்பதால், தக்காளிச் செடிகளை நட்ட விவசாயிகளே மனம் வெறுத்துப்போய் அதனை, வேருடன் பிடுங்கி வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருக்கிறது. இந்தப் பகுதியில் தென்னை, வாழை, மக்காச்சோளம் ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

மேலும், சீரான வருமானம் தரக்கூடியது என்ற நோக்கத்தில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.

இந்த நிலையில் தொடர்ந்து காய்கறிகளின் விலை சரிவடைந்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் தக்காளி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர்.

மேலும், சில விவசாயிகள் மனம் வெறுத்துப்போய் தக்காளி செடிகளை வேரோடு பிடுங்கி எறிகின்றனர்.

இது குறித்து பெதப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறுகையில்,

“இயற்கை முறை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றோம். இதற்கென தோட்டக் கலைத்துறை மானியத்துடன் சுமார் ரூ.18 இலட்சம் செலவில் பசுமைக்குடில் அமைத்துள்ளோம்.

மேலும், ரூ.25 ஆயிரம் செலவில் 18 டன் அளவிற்கு மாட்டுச் சாணத்தை வாங்கி உரமிட்டுள்ளோம்.

நாற்று, ஆள்கூலி, பராமரிப்பு என பல ஆயிரங்கள் செலவிட்டுள்ள நிலையில் தக்காளியின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், மிகுந்த வேதனையுடன் உள்ளோம். தற்போது சுமார் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.40 என்ற அளவில் விற்பனையாகிறது. ஒரு கூலி ஆள் ஒரு நாளைக்கு 10 பெட்டி அளவிலான தக்காளியை பறிக்க முடிகிறது. அவர்களுக்கு கூலியாக ரூ.250 கொடுக்க வேண்டியுள்ளது.

இங்கிருந்து உடுமலைக் கொண்டுச் சென்று சந்தையிலுள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காக, வண்டிக்கூலி, நுழைவு கட்டணம் என செலவு அதிகமாக உள்ளது.

இருப்பினும் போதிய தொகை கிடைக்காமல் வெறுங்கையுடன் வீடும் திரும்பும் நிலை உள்ளது. எனவே தக்காளி செடிகளை முற்றிலும் பிடுங்கி அழித்து விட்டு மாற்று பயிர் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கென தக்காளி செடிகளை பிடுங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, தோட்டக்கலைத் துறையின் சார்பில், இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை ஜாம், சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகளை உடுமலை, பெதப்பம்பட்டி பகுதிகளில் தொடங்க முன்வர வேண்டும்” என்று கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios