University Teachers Union protesting against university administrators asking for money
வேலூர்
எதற்கெடுத்தாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பணம் கேட்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்தினரை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளிடக்கிய பகுதிகளில் 128 கல்லூரிகளும், 6 உறுப்பு கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் சுமார் 1.80 இலட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்ற நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன், பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மூன்றாம் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மூன்றாம் மண்டலத் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார்.
புதிய கல்லூரி, புதிய பாட வகுப்புகள் தொடங்க, கல்லூரி விழாக்களில் கலந்து கொள்ள, ஆய்வு மாணவர் பதிவு என எதற்கெடுத்தாலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பணம் கேட்பதாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகார் மனுக்களை தமிழக ஆளுநர், உயர்கல்வித் துறைச் செயலர் ஆகியோரிடம் அளிக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி இளங்கோவன் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
