- Home
- Tamil Nadu News
- 45 நாட்கள் மின்சார ரயில்கள் கட்.. கைகொடுக்க வரும் சிறப்பு பேருந்துகள்.. சென்னைவாசிகள் கவனத்துக்கு..!
45 நாட்கள் மின்சார ரயில்கள் கட்.. கைகொடுக்க வரும் சிறப்பு பேருந்துகள்.. சென்னைவாசிகள் கவனத்துக்கு..!
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எங்கெங்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன? என்பது குறித்து பார்ப்போம்.

சென்னை மின்சார ரயில்கள்
சென்னையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இருந்தாலும், மிகவும் குறைவான கட்டணத்தில் சரியான நேரத்தில் மக்களை கொன்டு சேர்ப்பதில் புறநகர் ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் மின்சர ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலைய 10, 11வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வரும் 20ம் தேதி முதல் 45 நாட்களுக்கு 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டாலும் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடையும்விதமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை தாம்பரம் -செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப்ரவரி 20-ந் தேதி முதல் ஏப்ரல் 05 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தென்னக இரயில்வே மா.போ.கழகத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மா.போ.கழகம் வரும் 20.02.2026 முதல் 05.04.2026 வரை இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண்.E18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18A-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
பல்லாவரம் டூ செங்கக்பட்டு
மேலும் கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

