University assistant professors and students struggle all night
கோயம்புத்தூர்
உதவி பேராசிரியர் பணியிடத்தில் ஊழல் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இலஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், "உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பலாம்" என்று அரசு மீண்டும் உத்தரவிட்டுள்ளதாம். இதற்கிடையே, கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை உதவி பேராசிரியரும், பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. பேராசிரியர்கள் சங்க தலைவருமான சரவணகுமார், நேற்று மாலை பதிவாளர் அறைக்குச் சென்றார்.
பின்னர் அவரைச் சந்தித்து, "உதவி பேராசிரியர் பணியிடத்தில் ஊழல் நடக்கக் கூடாது" என்றும், "பணியிடங்களை நேர்மையாக நிரப்ப வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தார்.
அதுபோன்று பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பணிமாறுதல் வழங்கப்படுகிறது. அதில் சிலரை விரும்பாத இடங்களுக்கு மாற்றப்படுவதால், அவர்களின் "விருப்பத்தை கேட்டறிந்து மாறுதல் வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிவாளர் அளித்த பதில், அவருக்கு திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் அவர் மற்ற உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து பதிவாளர் அறை முன்பு அமர்ந்து தனது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "பல்கலைக்கழக துணைவேந்தர் இங்கு வந்து எங்களது கோரிக்கையை ஏற்றால்தான், போராட்டத்தை கைவிடுவோம்" என்று கூறினர்.
"தற்போது துணைவேந்தர் இங்கு இல்லை, அவர் வெளியூரில் இருக்கிறார்" என்று அவர்கள் கூறினாலும், "துணைவேந்தர் வரும்வரை நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறி, இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
