நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு அறிவிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாக திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனால் முதலமைச்சரும் அமைச்சர்களும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை திமுக எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எம்பி திருச்சி சிவா, நீட் தேர்வு விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு அறிவிக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாக தெரிவித்தார்.

இன்று மாலை முக்கிய அதிகாரிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை செய்ய உள்ளதாகவும், நீட் தேர்வுக்காக மத்திய அரசு அவசர சட்டம் இயற்றிய போது, அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், பதவி போராட்டத்திற்காக திமுக மீது அதிமுக அரசு குறை கூறுவது ஏற்புடையது அல்ல என திருச்சி சிவா தெரிவித்தார்.