தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!
தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர், வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.” என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தியது. அதேபோல், நிதி பங்கீட்டில் அநீதி இழைப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.
அதேசமயம், மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக, திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு புள்ளி விவரங்களோடு பதில் அளித்துள்ளது.
அதன்படி, டந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகள் (இறக்குமதி வரி மீதான ஜிஎஸ்டியைத் தவிர்த்து) ரூ.22,26,983.39 கோடி. அதே காலக்கட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் வசூலிக்கப்பட்ட வரி ரூ.3,41,817.60 கோடியாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கிய வரிப் பகிர்வுத் தொகை ரூ.6,42,295.05 கோடி. அதுவே, கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் விடுவிக்கப்பட்ட வரிப் பகிர்வுத் தொகை சுமார் ரூ.6,91,375.12 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாநிலங்கள் கொடுத்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு திருப்பி அனுப்பிய தொகை விவரம் பின்வருமாறு;
** தமிழ்நாடு - 26 பைசா
** கர்நாடகா - 16 பைசா
** தெலுங்கானா - 40 பைசா
** கேரளா - 62 பைசா
** மத்தியா பிரதேசம் - 1.70 ரூபாய்
** உத்தரப் பிரதேசம் - 2.2 ரூபாய்
** ராஜஸ்தான் - 1.14 ரூபாய்
மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன.