இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கவுசல்யா பேசியது தொடர்பாக ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக வெலிங்டன் கண்டோன்மெண்ட் முதன்மை அதிகாரி ஹரிஸ்வர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கரை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார் கவுசல்யா. பின்னர் சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விதவைகளுக்கான ஓய்வூதியம், அகவிலைப்படி உட்பட மாதம்தோறும் ரூ.11,250 வழங்கப்பட்டது.

சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், பெருமாள்புரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உண்டு, உறைவிடப்பள்ளியில் சமையலர் பணியும் ஒதுக்கப்பட்டது. கவுசல்யா ஆதரவற்ற பெண் என்றும், கணவனை இழந்த பெண் என்றும், மிகப்பெரிய கொடுமைக்கு உள்ளான பெண் என்றும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த நவம்பர் 30 தேதி கவுசல்யாவின் மத்திய அரசு வேலை நிரந்தரமாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது வரை காத்திருந்து பின்னர் ஒரு வாரத்தில் சக்தியை மறுமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அண்மையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த அவர், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கவுசல்யா மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றது.

அதனடிப்படையில் கவுசல்யா மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய வெலிங்டன் கணோன்மெண்ட் முதல்மை அதிகாரி ஹரிஸ்வர்மா, ‘’ கவுசல்யா மீது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், குழு அமைத்து ஒருவாரத்தில் விசாரணை நடத்தப்படும். அந்த அறிக்கை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கை அடிப்படையில், அவர் மீது மேற்கொண்டு நடவக்டிகை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார். 

அந்த வீடியோவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக காத்திரமாக பேசியிருப்பதால் கவுசல்யா மீது கடும் நடவடிக்கை இருக்கும். அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.