நாகை மற்றும் கடலூர் மாவட்டஙகளை பெட்ரோலிய மண்டலங்களாக அரசு மாற்றாது என வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலியம் மண்டலமாக வரையறுத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டத்திலுள்ள 25 கிராமங்களும் நாகை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 20 கிராமங்களும் முதலீட்டு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

இதனிடையே பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டங்கள் அமையும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நாகை மற்றும் கடலூர் மாவட்டஙகளை பெட்ரோலிய மண்டலங்களாக அரசு மாற்றாது என தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது எனவும், அந்த வகையில் தான் இந்த திட்டமும் உள்ளது எனவும் தெரிவித்தார்.