மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறுத்த நிலையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு நேற்று இணைந்து விட்டது.

ஏற்கனவே தேசிய உணவுப்பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்துவிட்ட நிலையில், இப்போது உதய் திட்டத்திலும் தமிழக அரசு இணைந்துள்ளது. ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த இரு திட்டங்களையும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவர் மறைந்தபின், பலநிர்பந்தங்களால் தமிழக அரசு பணிந்துள்ளது.

உதய் திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசின் உதய்திட்டம் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 5-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி மாநில அரசின் மின்பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்கவும், அவற்றை புதுப்பிக்கவும் வழிவகை செய்கிறது என்று மத்தியஅரசு கூறுகிறது.

மின் உற்பத்தி விலையைக் குறைக்கவும், மின் விநியோகத் திறமையை மேம்படுத்தவும், மின் விநியோக அமைப்புகளின் வட்டிச் சுமையைக் குறைக்கவும் மின் விநியோக அமைப்புகளின் நிதி நிலை, மேலாண்மையை நிலைநாட்டவும் உதய் திட்டம் கொண்டு வரப்பட்டது. மின் திருட்டை கட்டுப்படுத்துவதும், உற்பத்தி விலைக்கேற்ப மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதும் உதய் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

 

எதிர்ப்பு

 

ஆனால், இந்த திட்டத்தில் இணைவதற்கு தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசுக்கு சம்மதம் கிடையாது. இது மாநில அரசுகளின் சுயாட்சியையும், கூட்டாட்சி தத்துக்குவத்துக்கு விரோதமானது என்றும் கூறி மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வந்தார்.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு கடந்த ஏப்ரலில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து பேச மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என வெளிப்படையாக குற்றம்சாட்டினர்.

 

மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர், மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக மக்கள் நலனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை.

 

தமிழக மின்வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் உதய் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை. இதன் காரணமாக தொடக்கத்தில் இருந்த தமிழகத்துக்கும், மத்தியஅரசுக்கும் உதய் திட்டத்தில் இணைவதில் இழுபறியும், சிக்கலும் நீடித்து வந்தது.

 

 இந்த உதய் திட்டத்தால் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மின்வாரியங்களின் கடன்களை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் இந்தத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தனியார் மின் உற்பத்தியாளர்கள், வங்கிகளுக்கு ஆதரவான திட்டம். நிதிப் பொறுப்பு, செலவு மேலாண்மைக்கு 2 ஆண்டுகளுக்கு மட்டுமே தளர்வு செய்யப்பட்டுள்ளதால். மாநில அரசால் கடன் எதையும் பெற முடியாது மொத்தக் கடனில் 75 சதவீத்தை மாநில அரசு ஏற்க வேண்டும், 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான அம்சங்கள் உதய் திட்டத்தில் உள்ளன இதன் காரணமாக தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்தது. மேலும், வீடுகளில் மின் மீட்டர் பொருத்துவதற்கான 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவையும் தமிழ்நாடு மின்சார வாரியமே ஏற்றுள்ளது. ஆனால் இந்த செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உதய் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை என்று தமிழக அரசு எதிர்த்து வந்தது.

 

இது தொடர்பாக,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் 11-4-2016-ல் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசி இருந்தார்.

 

மேலும், கடந்த அரசில் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் உதய்திட்டத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

உதய் திட்டம் தமிழக மக்களுக்கு பயன் அளிக்காத திட்டம்தான். இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 75 சதவீத கடனை மாநில அரசு எடுத்துக்கொண்டு அதற்கு ஈடாக கடன் பத்திரங்களை வெளியிட்டால், நிதிப் பற்றாக்குறை தொடர்பாக நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறைகளை மீறவேண்டிய நிலை ஏற்படும்.

இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்க முன்வராத நிலையில் இதுபோன்ற ஒரு திட்டத்தினால் என்ன பயன்? மேலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்களை மாற்றியமைப்பது என்பது எந்த விதத்தில் நியாயமாகும்? என்று கேட்டு இருந்தனர்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை மாற்றி அமைத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். முழுக்க முழுக்க தனியார் வசம் மின்வாரியம் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இதில் இணைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுத்தார்.

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என பகிரங்கமாக அறிவித்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் சென்னையில் கடந்த ஆண்டு மறைந்த முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போது கூட உதய் திட்டத்தில் இணைவது குறித்து அவர் இருக்கும் வரை எந்த அறிவிப்பும் இல்லை.  

இந்நிலையில், தமிழக மக்கள் நலன் கருதியும், சில மாற்றங்களை கொண்டு வந்தால் தான் இத்திட்டத்தில் இணைய முடியும் இல்லாவிட்டால் தமிழகம் உதய் திட்டத்தை ஏற்காது என்று ஜெயலலிதா இறுதி வரை கூறி வந்தார்.

அவர் ஏற்காத உதய் திட்டத்தை, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசு ஏற்று இணைந்துள்ளது. எந்த நிர்பந்தத்தால் தமிழக அரசு இணைந்தது என்பது தெரியவில்லை.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  1. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
  2. நலிவடைந்த மின்வாரியங்களை சீரமைப்பது,
  3.  மின் வினியோகத்திலும் தனியாருக்கு அனுமதி,
  4.  பெட்ரோல், டீசல் போன்று, மூன்று மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது,
  5. மீட்டர் பொருத்தாத மின் இணைப்புகளே இருக்க கூடாது,
  6.  இலவச மின்சாரத்துக்கும் மீட்டர் பொருத்த வேண்டும்,
  7.  ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் மூலம் மின் கம்பங்கள், பூமிக்கு அடியில் பதிக்கும் கேபிள்கள், டிரான்ஸ்பார்ம் அதிகப்படுத்துவது உள்ளிட்டவை மேம்படுத்தப்படும். 
  8.  மின்வினியோகமும் கம்ப்யூட்டர் மூலம் நவீனப்படுத்தப்படும்.
  9. மின் இழப்பு குறைக்கவும், மின் திருட்டை கண்டுபிடிக்கவும் சிறப்பு திட்டம்

ஆகிய அம்சங்கள் உள்ளன.

ஊழியர்கள், ஓய்வூதியர்களின் கதி என்ன?

தமிழக மின்வாரியத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணி புரிந்து வருகின்றனர். மேலும் 85 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். உதய் திட்டம் அமலுக்கு வந்தால், அனைத்தும் தனியார் வசம் சென்று விடும். 

இவர்களுக்கு பணி வழங்கப்படுமா, ஓய்வூதியர்களின் கதி என்ன என ஏராளமான கேள்விகளுக்கு இதுவரை மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை.