Two women were attacked by wild elephant get severe injury ...

நீலகிரி

நீலகிரியில் காட்டு யானை துதிக்கையால் தாக்கியதில் பெண்கள் இருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் ஒன்று உள்ளது. இங்கு டெல்லோஸ் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் எஸ்டேட் வேலைக்கு சென்றனர். மாலை 5 மணிக்கு வேலை முடிந்து பத்து தோட்டத் தொழிலாளர்கள் தங்களது வீட்டுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.

எஸ்டேட்டில் இருந்து வீட்டுக்கு சுமார் 2 கி.மீட்டர் தூரமுள்ளது. மேலும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் தோட்டத் தொழிலாளர்கள் காபி எஸ்டேட் வழியாக கூட்டமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். 

அப்போது, டெல்லோஸ் பகுதியைச் சேர்ந்த வர்கிஷ் மனைவி ராதா (45), கிருஷ்ணன் மனைவி லதா (45) ஆகிய இருவரும் மற்ற தொழிலாளர்களுக்கு முன்னால் நடந்துச் சென்றனர்.

ப்போது, காபி தோட்டத்திற்குள் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென தொழிலாளர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதனைக் கண்ட மற்றத் தொழிலாளர்கள் வந்த வழியாக திரும்பி ஓடினர். 

ராதாவும், லதாவும் அவர்களுடன் ஓட முயன்றனர். ஆனால், வேகமாக பின்தொடர்ந்து வந்த காட்டு யானை ராதா, லதாவின் முதுகில் துதிக்கையால் தாக்கியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். 

அப்போது, மற்றத் தொழிலாளர்கள் காட்டு யானையை நோக்கி சத்தம் போட்டனர். இதனால் யானை வந்த வழியாக திரும்பி சென்றது. 

பின்னர் பலத்த காயமடைந்த இரண்டு பெண்களையும் சக தொழிலாளர்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த நியூகோப் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ், வனச்சரகர் ராமகிருஷ்ணன், வன காப்பாளர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.