Asianet News TamilAsianet News Tamil

அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்...

Two women died by car accident Relatives road block
Two women died by car accident Relatives road block
Author
First Published Mar 27, 2018, 10:29 AM IST


தருமபுரி 

தருமபுரியில் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் அடுத்த கண்டகபைல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி காவேரியம்மாள் (45). அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மனைவி சின்னபாப்பா (42). 

இவர்கள் இருவரும் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தனர். அதற்கான கூலியை வங்கி கணக்கில் இருந்து எடுப்பதற்காக நேற்று பேருந்தில் மல்லுப்பட்டிக்கு காவேரியம்மாள், சின்னபாப்பா இருவரும் சென்றனர்.

 பின்னர் அவர்கள் வங்கியில் பணத்தை எடுத்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். கண்டகபைல் கிராமத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய இருவரும் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று காவேரியம்மாள், சின்னபாப்பா ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காவேரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சின்னபாப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னபாப்பா பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த காவேரியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி, காவேரியம்மாள், சின்னபாப்பா ஆகியோரின் உடலை வாங்க மறுத்து பாலக்கோடு அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அவர்களுடைய உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் விஸ்வநாதன், தாசில்தார் அருண் பிரசாத் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios