மதுரை

மதுரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பெண்களில் இரண்டு பெண்களை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய பெண்களை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த செக்கானூரணி பகுதியில் மூன்று பெண்கள் கஞ்சா கடத்தி வருகின்றனர் என்ற தகவல் காவலாளர்களுக்கு கிடைத்தது.

அந்த தகவலை அடுத்து, செக்கானூரணி காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவலாளர்கள் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, செக்கானூரணி அருகே மாவிலிப்பட்டி பகுதியில் மூன்று பெண்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதன்மூலம் தங்களுக்கு கிடைத்த தகவல் உண்மைதான் என்பதை உறுதி செய்தனர் காவலாளர்கள்.

அதனையடுத்து, விளாங்குடியைச் சேர்ந்த சிவபாலன் மனைவி ஜோதி (51), சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த தங்கமணி மனைவி ஜெயா (51) ஆகிய இரண்டு பெண்களையும் காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா எங்கே இருந்து கிடைத்தது? விற்பனைக்கு வாங்கப்பட்டதா அல்லது தோட்டம் வைத்து அவர்களாகவே உற்பத்தி செய்கின்றனரா? போன்று அவர்கள் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர் காவலாளர்கள்.

மேலும், தப்பியோடிய செக்கானூரணியைச் சேர்ந்த பாண்டி மனைவி தமிழ்செல்வியை (51) காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.