நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணிடம் இருந்து ரூ.2 இலட்சம் மதிப்பிலான நகைகளை திருட முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை காவலாளர்கள் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல், காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த அசாருதீன் என்பவரின் மனைவி சாக்பானா பர்வீன் (27). இவர் சனிக்கிழமை தனது சகோதரிகளுடன் மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார்.

மயிலாடுதுறை அடுத்த காவேரி நகர் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது பக்கத்தில் சக பயணிகள்போல நின்றுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள், சாக்பானா பர்வீன் கை பையில் வைத்திருந்த சுமார் ரூ.2 இலட்சம் மதிப்பிலான 10 சவரன் நகைகளை திருட முயற்சித்துள்ளனர்.

அப்போது, அதனைப் பார்த்துவிட்ட சாக்பானா பர்வீன் சத்தம் போடவே சக பயணிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து மயிலாடுதுறை காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்களிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் இருவரும், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், இலட்சுமிபுரம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவா  மனைவி தேவி (24), மற்றும் சி. மீனாட்சி (35) என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து அவர்கள் இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.