நீலகிரி

குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவரிடம் அடுத்தடுத்து வந்து மனு கொடுத்த இரண்டு கிராம  மக்கள். 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். இதில் மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். 

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 163 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.  

இந்தக் கூட்டத்திற்கு வந்த கீழ்கோத்தகிரி தென்றல் நகரைச் சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், “கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கீழ்கோத்தகிரி தென்றல்நகர் பகுதிக்கு பிக்கட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இங்கு இரண்டு கிராமங்களுக்கும் பயன்படும் பகுதியில் பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 25 நாள்களாக தென்றல் நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் பிக்கட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து தலை சுமையாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. 

அங்கும் மூன்று குடங்களுக்கு மேல் தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே, தென்றல் நகரில் புதிதாக குடிநீர் கிணறு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, பைக்காரா கிராம மக்கள் கொடுத்த மனுவில், “பைக்காரா கிராமத்திற்கு மின்சார வாரியம் மூலம் பைக்காரா அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

கடந்த 1-ஆம் தேதி எந்தவித முன்னறிப்பும் இன்றி, கிராமத்துக்கு வரும் குடிநீர் குழாய் அடைத்து சீல் வைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். 

எனவே, மின்வாரிய குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இப்படி இந்த இரண்டு கிராம மக்களும், தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று கொடுத்த மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவர் உறுதி அளித்தார்.