நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் உரிய அனுமதியின்றி  மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்த காவலாளர்கள் அதன் ஓட்டுநர்களை கைது செய்தனர். 

நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மணல்மேடு காவல் ஆய்வாளர் மற்றும்  காவலாளர்கள், நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

முடிகண்டநல்லூர் மாதவன் தெரு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மணல் ஏற்றிக் கொண்டுச் சென்ற 2 டிராக்டர்களை மடக்கி சோதனை செய்தனர். அதில், உரிய அனுமதியின்றி மணல் ஏற்றப்பட்டிருந்ததை காவலாளர்கள் கண்டுபிடித்தனர். 

இதையடுத்து, டிப்பருடன் கூடிய இரண்டு டிராக்டர்களையும் மணலுடன் பறிமுதல் செய்தனர் காவலாளர்கள். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்து, டிராக்டர்களின் ஓட்டுநர்களான உத்திரங்குடி காலனித் தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் மனோஜ்குமார் (21) கடலங்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த வீரபாண்டியன் மகன் விக்னேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவலாளார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.