திண்டுக்கல்

மணக்கடவு அருகே இரு சக்கர வாகனங்கள் வந்துக் கொண்டிருந்தவர்கள் மோதிக்கொண்டதில்  இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்,  பழனி புளியம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் ராமர் (23). இவர், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வந்தார்.  

இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரான பழனிக்குச் சென்றுவிட்டு நேற்று தாராபுரம் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது,  மணக்கடவு அருகே சாலை சந்திப்பில் இந்த இரு சக்கர வாகனம் மீது பக்கவாட்டு குறுக்குச் சாலையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில்,  குறுக்குச் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த, பழனி புது ஆயக்குடி ஒய்லாபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமி (45) சம்பவ இடத்திலேயே அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில், பலத்த காயமடைந்த நிலையில் கோவை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ராமர் போகும் வழியிலேயே உயிரிழந்தார்.  

இந்த விபத்து குறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.