திருவள்ளூர் 

திருவள்ளூரில் இரண்டு அரசு பேருந்துகளை சிறைப் பிடித்து மக்கள்  மற்றும் பல்வேறு சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தண்டலத்தில் இருந்து சென்னை பாரிமுனை, அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 

இந்த பேருந்துகள் சரிவர இயக்கப்படாததை அடுத்து நேற்று காலை இந்த இரண்டு அரசு பேருந்துகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கம், இளைஞர் மாணவர் சங்கத்தினரோடு ஏராளமான மக்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்

பெரியபாளையம் அருகே தண்டலம் பஜாரில் நடந்த இந்த மறியலில் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, "போக்குவரத்து கிளை அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்" என்று மறியலி ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

அதன்படி, பேருந்துகள் சீராக இயக்கப்படும் என்று போக்குவரத்து அலுவலர் வந்து உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.