தருமபுரி

தருமபுரியில் திருட்டுத்தனமாக 2 டன் போதைப் பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பல கடைகளில் மறைத்து வைக்கப்பட்டு சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் காவலாளர்களுக்கு கிடைத்தது.

இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி தருமபுரி நகர காவலாளர்கள் தர்மபுரி நகரில் புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சகார தெருவில் உள்ள ஒரு பழைய வீட்டில் பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் நேற்று அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட தடைச் செய்யப்பட்ட போதைப் பாக்குகள், புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 இலட்சம் இருக்குமாம்.

இந்தப் போதைப் பாக்குகள் தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது.

இதுதொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் காந்தி, ஆய்வாளர் ரத்தினகுமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வழக்குப்பதிந்த தர்மபுரி நகர காவலாளர்கள் இதில் தொடர்புடைய தர்மபுரியைச் சேர்ந்த லோகாந்தன் (43), அஸ்கர்அலி (31) ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர்.