TVK Madurai Maanadu : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடான மதுரை மாநாட்டில் தலைவர் தளபதி விஜய் மேடைக்கு வருகை தந்த போது அப்பா அம்மாவிடம் ஆசி பெற்று ரேம்ப் வாக் செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தற்போது மதுரை – தூத்துக்குடி சாலையிலுள்ள பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிகாலை முதலே ரசிகர்களும், தொண்டர்களும் வருகை தந்த வண்ணம் இருந்தனர். இந்த மாநாட்டில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக எல்லா ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் மருத்துவ வசதி, தண்ணீர் வசதி குறிப்பிடத்தக்கவை.
இந்த நிலையில் தான் மாலை 4 மணிக்கு தொடங்கிய மாநில மாநாட்டில் ''உங்கள் விஜய் உங்கள் விஜய், உயிரென வரேன் நான்..'' என்று விஜய் பாடிய பாடல் பின்னணியில் ஓலிக்க தவெக தலைவர் விஜய் தவெக தொண்டர்கள் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மேடையேறினார். மேடையில் இருந்த தனது தாய், தந்தையிடம் விஜய் ஆசி பெற்றார். அப்போது விஜய்யின் தாய் ஷோபனா அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து ஆசி வழங்கினார்.
பின்னர் ரேம்ப் வாக் செய்த தளபதிக்கு ஏராளமான ரசிகர்கள் மேடை ஏறி மாலை அணிவித்து, கட்சி துண்டையும் அவர் மீது வீசினர். அதையெல்லாம் விஜய் தனது கையில் பிடித்து கழுத்தில் போட்டுக் கொண்டார். அதோடு தலையிலும் கட்டிக் கொண்டு கம்பீரமாக ரேம்ப் வாக் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்பு விஜய் தங்களது கட்சியின் கொள்கை தலைவர்களான காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி, 40 அடி உயர கொடிக்கம்பத்தில் தவெக கொடியை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
