சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் தொடர்பாகவும், மழை மற்றும் புயல் நிவாரணம் தொடர்பாகவும் தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறி எப்ஐஆர் வெளியானது. இதில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், ஊர், மொபைல் எண் போன்றவை இடம்பெற்றுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கல்வி நிலையங்களில் கூட பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாக அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனவும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக களம் இறங்கி விசாரணை நடத்தி வருகிறது. 

ஆளுநரை சந்தித்த விஜய்

இந்தநிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மழை, வெள்ள நிவாரணம்

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.