இரவு நேரத்தில் மகளிரணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் செந்தில்நாதன். இவர் கூட்டப்பள்ளியில் வசித்து வரும் கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் உள்ளே சென்று கதவை பூட்டியுள்ளார்.

செந்தில்நாதனின் அத்துமீறிய செயலை அறிந்த பெண் நிர்வாகியின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்தப் பெண்ணுடன் மாவட்டச் செயலாளர் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பந்தப்பட்டப் பெண்ணை சரமாரியாகத் தாக்கினர்.

மேலும் செந்தில் நாதனிடமும் பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் செந்தில்நாதனை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கட்சியின் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.