தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுக்கும் முழு அதிகாரம் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டது. தேர்தல் அறிக்கை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கென தனி குழுக்கள் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை தலைவர் விஜய்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. எனினும், தவெக தலைவர் விஜய் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இக்கூட்டத்தில் மொத்தம் நான்கு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
விஜய்க்கு முழு அதிகாரம்: ஊழல் நிறைந்த தி.மு.க. ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை உருவாக்க வேண்டும். தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரது தலைமைக்கு விரும்பி வருபவர்களைக் கூட்டணிக்கு அரவணைப்போம். கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
தேர்தல் கூட்டணி குழு: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக் குழு" அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் கடமைகள் குறித்து தலைவர் விஜய்யே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தேர்தல் அறிக்கை குழு: தமிழக மக்களைக் காக்க, கழகத்தின் சார்பில் "தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்புக் குழு" அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் கடமைகள் குறித்தும் தலைவர் விஜய்யே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
வலிமையான பரப்புரை: அவதூறு பரப்பும் எதிரிகளின் பொய்யுரைகளைத் தோலுரித்து, அவர்களை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா பேட்டி
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது ஒரு நல்ல விஷயம். இதற்காக பா.ம.க. சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தை தமிழக வெற்றிக் கழகம் பெற்றுக் கொண்டுள்ளது. நிச்சயம் கட்சித் தலைவரிடம் (விஜய்) இது குறித்து ஆலோசித்து, போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்," என்று கூறினார்.


