திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஒன்றிய அதிமுக செயலாளரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரனின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தும், தீயிட்டு எரித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த யாகப்பனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிதாக நல்லதம்பி என்பவரை டி.டி.வி.தினகரன் நியமித்தார்.

இதனால் டி.டி.வி.தினகரனை எதிர்ப்பு ஒன்றியச் செயலாளர் யாகப்பன் தலைமையில், நகரச் செயலாளர்கள் சேகர் (நிலக்கோட்டை), தண்டபாணி (அம்மையநாயக்கனூர்) உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் நிலக்கோட்டை நால்ரோட்டில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், டி.டி.வி.தினகரனின் உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முழக்கங்களையும் எழுப்பினர். அத்துடன் தினகரனின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.