வந்தேபாரத் ரயிலில் திடீரென பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..! என்ன காரணம் தெரியுமா.?
சென்னை முதல் கோவையும், கோவை முதல் சென்னை வரை இயங்கும் வகையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவையில் சேலத்தில் இருந்து சென்னை வருவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அப்போது ஏராளமான பயணிகள் எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
வந்தே பாரத் ரயில் சேவை
எலக்ட்ரானிக் யுகத்திற்கு ஏற்ப மனிதர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மக்களின் வேகத்திற்கும் ஈடு கொடுக்க ரயில்வே துறையும் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் உள்நாட்டிலையே தயாரிக்கப்பட்ட ரயில் மூலமாக ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு வேகமாக செல்ல வந்தே பாரத் ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவையின் அடுத்த கட்டமாக இந்தியாவின் 14-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
வந்தே பாரத் ரயிலில் இபிஎஸ்
கோவை - சென்னை ஆகிய இரு நகரங்களுக்கும் இடையேயான பயண ஏற்கனவே 7.30 மணி நேரங்களாக இருந்து வந்தது. ம=தற்போது வந்தே பாரத் ரயில் சேவை மூலம் 5 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்துள்ளது. சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு பெரும்பாலும் காரில் பயணம் செய்வார். அல்லது கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருவார். இந்தநிலையில் இன்று சென்னை வர திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி வந்தேபாரத் ரயிலில் பயணிக்க முடிவு செய்தார்.
செல்பி எடுத்த ரயில் பயணிகள்
அதன்படி இன்று காலை கோவையில் இருந்து சென்னைக்கு புறப்ட்ட வந்தே பாரத் ரயிலில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார். இந்த ரயில் பயணத்தில் மக்களோடு மக்களாக பயணித்த எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ரயில் பயணிகள் ஆர்வமோடு செல்பி எடுத்து மகிழந்தனர்.