காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்  அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் பேச்சவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை தனி ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்களுக்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பையும், ஒப்பந்தத்தையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

பணி ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களுக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஏற்கனவே 2 முறை நடைபெற்ற பேச்சவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில வரும் 12ம் தேதி முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாசிம் பேகம் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.