பிணங்களைப் பார்த்தா எனக்கு பயமில்லை ஆனால் மனுஷங்களைப் பார்த்தாத்தான் பயமா இருக்கு என பிணங்களை எரிக்கும் தொழில் செய்யும் திருநங்கை அட்சயா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் திருநங்கை அட்சயா. ஒன்பதாவது படிக்கும் போது அவரது உடலில் ஏற்பட்ட சில மாற்றகளைப் பார்த்து அதிர்ந்து போனார். ஆம் அவர் திருநங்கைதான் என அப்போது ஏற்பட்ட உணர்வு தான் அதை உறுதிப்படுத்தியது.

அட்சயாவின் உடல் மற்றும் உணர்வில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆசிரியர்களும், மாணவர்களும் அவரை ஏளனமாகப் பார்த்தனர். அதற்கு மேல் தன்னால் அங்கு தொடர்ந்து படிக்க முடியாது என்பதால் அத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

அவரது வீட்டிலும் அட்சயாவை ஒதுக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு அவர் துரத்தப்பட்டார். விரக்தியடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுவும் தோல்வியிலே முடிந்தது.

தனது பசியைப் போக்குவதற்காக பல இடங்களில் வேலை தேடியபோது, முதலில் அவர்கள் சொன்னதெல்லாம் உடல் பசியைத் தீர்க்க முடியுமா என்பதுதான் ? இப்படி பசி, பட்டினி, காமக் கொடூரர்களின் பாலியல் தொந்தரவுகள் என வாழ்க்கையே வெறுத்துப் போனார்.

ஒரு கட்டத்தில் இந்த கோர மனிதர்களுக்குப் பயந்து சுடுகாட்டில் தூங்கியுள்ளார். ஆனால் அங்கேயும் வந்து பலர் தொந்தரவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்தார் வைரமணி என்ற பெண்மணி.

சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் தொழில் பார்த்து வந்த வைரமணியுடன் ஒட்டிக் கொண்டார் அட்சயா. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிணம் எரிக்கும், அடக்கம் பண்ணும் தொழிலை அட்சயாவும் கற்றுக் கொண்டார்.

தற்போது கோவை சொக்கம் புதூர் சுடுகாட்டில் அட்சயா பிணம் எரிக்கும் தொழில் செய்தது வருகிறார்.

இப்போ எல்லாம் எந்த நேரத்தில் பிணங்கள் கொண்டு வந்தாலும் அவற்றைக் கண்டு பயப்படாமல் எரிக்கவும், புதைக்கவும்  செய்வதாக கூறிய அட்சயா, அங்கு மனிதர்கள் வந்தால் தான் பயமாக இருக்கிறது என கண்களில் மிரட்சியுடன் தெரிவிக்கிறார்.