Trained Canceled Trainers People who were raging Siege of the office officers office
வேலூர்
அரக்கோணத்தில் மூன்று வெவ்வேறு நேர மின்சார இரயில்களை திடீரென ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்த இரயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை, முற்றுகையிட்டு கேள்விக் கேட்டனர் மக்கள்.
அரக்கோணம் இரயில் நிலையம் - சென்னை கடற்கரைக்கு தினமும் காலை 6.25 மணிக்கு செல்லும் மின்சார இரயில் நேற்று ஆவடி வரைச் செல்லும் என்று இரயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் 6.40 மணிக்குச் செல்லும் மின்சார இரயிலும் ரத்துச் செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7.55 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து சென்னை வரைச் செல்லும் மின்சார இரயில் ஆவடி வரைச் செல்லும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த திடீர் அறிவிப்பால் மின்சார இரயில்களில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் சினம் கொண்ட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அரக்கோணம் இரயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, நிலைய அதிகாரியிடம் பயணிகள், “அரக்கோணம் இரயில் நிலையத்தில் காலையில் இந்த இரயில்களை நம்பிதான் நாங்கள் வேலைக்குச் சென்று வருகிறோம்.
திடீரென அனைத்து இரயில்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டோம் என்று கூறினால் நாங்கள் எந்த இரயிலில் செல்வது? எதற்காக திடீரென்று இப்படி அறிவித்தீர்கள்” என்று அதிரடியாக கேள்விக் கேட்டனர்.
அதற்கு நிலைய அதிகாரி, ‘சென்னை, இராயபுரம் இரயில் நிலையம் பகுதியில் தண்டவாளம் மாற்றும் பணியும், பராமரிப்பு பணிகளும் நடந்து வருவதால் இரயில்கள் செல்ல முடியாது என்று நேற்று இரவுதான் எங்களுக்குத் தகவல் வந்தது. அதன்பேரில் நாங்கள் இரயில்கள் செல்லாது என அறிவிப்பு செய்கிறோம்” என்று பதட்டமுடன் தெரிவித்தார்.
இதனால் நிலைய அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் இரயில்வே காவலாளர்கள், இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேறுவழியின்றி பயணிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனால் இரயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
