திருப்பூர்

முதல்வரை வரவேற்று திருப்பூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. நேற்று முன்தினம் அவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளம்பர பதாகையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் குமரன் சாலையில் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பல்லடம் அருகே கரையாம்புதூரில் சனிக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுக-வினர் சார்பில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது.

இதனைப் பார்த்த அவர் உடனே அந்த விளம்பர பதாகை மற்றும் வடக்கு தாசில்தார் அலுவலக நுழைவு வாசலில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகை ஆகியவற்றை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் அந்தப் பகுதிக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம், காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அவர், “விளம்பர பதாகையை அகற்றும் வரை அங்கிருந்து செல்லமாட்டேன்” எனக் கூறி மறுத்துவிட்டார். அதன் பின்னர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை அகற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகையை அகற்றக்கோரி அந்த பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகும் அந்த விளம்பர பதாகை அகற்றப்படவில்லை.

பின்னர் உடல்நிலை சரியில்லாததால் டிராபிக் ராமசாமி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

போராட்டத்தின் போது வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் டிராபிக் ராமசாமி போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகரிடம் புகார் கொடுத்தார்.

அப்போது டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக மக்கள் சிலர் கோபிநாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரண்டாவது நாளாக விளம்பர பதாகையை அகற்றக்கோரி போராட்டத்தில் அவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.