தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைப் பேசாத எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வந்திருந்தார். 

திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற டிராபிக் ராமசாமி, அலுவலக முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேனர்களை அகற்றுமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

பின்னர், டிராபிக் ராமசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில், மக்கள் பிரச்சனை குறித்து எந்த உறுப்பினரும் பேசுவதே கிடையாது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 50,000 ரூபாய் வரை ஊதியம் அதிகப்படுத்து 1 லட்சத்து 5 ஆயிரமாக கொடுத்திருக்கிறார்கள்.

சமூகப் பணி செய்ய வந்தோம் என்பவர்களுக்கு, லட்சங்களில் எதற்கு சம்பளம் தர வேண்டும். ஆளும் அதிமுக அரசானது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில் இருந்து கருணாநிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடுத்தவருக்காவது வாய்ப்பைத் தரலாம்.

கதிராமங்கலம் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரையும் வரும் 22 ஆம் தேதிக்குள் விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் தஞ்சை நீதிமன்றம் அல்லது தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவேன். 

கைது செய்தவர்களை விடுவிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுப்பேன். இவ்வாறு டிராபிக் ராமசாமி கூறினார்.