traffic police attacked road side fruit shop
நடைபாதையை ஆக்கிரமித்ததாக கூறி பழக்கூடையை தள்ளிவிட்டு கடை உரிமையாளரை போக்குவரத்து காவலா்கள் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் வடக்கு மாசி வீதியில் பழக்கடை ஒன்றிற்கு சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளா் தங்கரத்தினம் என்பவர் பழக்கடை நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து பழங்களை அப்புறப்படுத்துமாறும் கோபமாக கூறியிருக்கிறார். அப்போது கடையில் உள்ளவா்கள் பழங்களை எடுத்து உள்ளே வைக்கும் சமயத்தில் அவா்களை சரமாரியாக தாக்கியும், பழக்கூடைகளை தள்ளிவிட்டும் அத்துமீறி நடந்து கொண்டார்.
இதற்கு பழக்கடை சங்கத்தினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அத்துமீறி நடந்துகொண்ட காவல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் கடைக்காரா்களை காவல்துறை அதிகாரி தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல நேற்று சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் காவல்துறை அதிகாரி ஒருவா் சீட் பெல்ட் அணியவில்லை என்று கால் டாக்சி டிரைவரை சரமாரியாக தாக்கியதால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற காவல்துறையினரின் அத்துமீறல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
