போடிமெட்டு சாலையில் திடீரென ஏற்பட்ட நீர் வீழ்ச்சி..! வெள்ளப்பெருக்கால் போக்குவரத்திற்கு தடை
போடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை. போடிமெட்டு மலைச்சாலையில் ஆங்காங்கே அருவிகள் உருவாகி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு தடை.விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணி முதல் 5 மணி வரை கனமழை வெளுத்துக் கட்டியது. இதன் காரணமாக மதுரையிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள மலைப் பகுதிகளில் ஆங்காங்கே அருவி போல நீர் கொட்டி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த சாலை வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜீப்புகள் மூலமாக ஏலத்தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளர்கள் கேரளாவிற்கு வேலைக்கு சென்று திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் அவ்வாறு திரும்பி வந்த கூலித் தொழிலாளர்களின் ஜீப்புகள் அனைத்தும் சாலைகளில் வழிந்தோடி வந்த வெள்ள நீரில் சிக்கிக்கொண்டன.பின்னர் ஓட்டுநர்கள் சாமர்த்தியமாக போடி மட்டும் பகுதியில் இருந்து முந்தல் பகுதிக்கு சென்று காவல்துறையினரிடம் தகவல் கூறியதை தொடர்ந்து, தற்போது காவல்துறையினர் போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர்.இதனால் தமிழகம் நோக்கி வந்த வாகனங்கள் போடிமெட்டு சோதனைச் சாவடியிலும், கேரளா நோக்கி சென்ற வாகனங்கள் போடி முந்தல் பகுதியில் உள்ள சோதனை சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் போடி -மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கனமழை வெளுத்துக் கட்டி வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு மதுரை மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட வாய்ப்புள்ளது. இன்றுகாலை மழைச்சாலையை ஆய்வு செய்து சாலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிந்த பின்னரே போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
பெரியகுளம் பண்ணை வீட்டில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையா..? அதிர்ச்சியில் ஓபிஎஸ்