தென்காசி,
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உல்லாச குளியல் போட்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை கொட்டி வருவதால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் அருவிகளில் உல்லாச குளியல் போட்டு வருகின்றனர். புதன்கிழமை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
புதன்கிழமை மாலை முதல் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரவு 7 மணி முதல் பிரதான அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஆவலுடன் குற்றாலத்துக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பிரதான அருவியில் குளிக்க முடியாததால் வாடினர்.
ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்தது. இதனால், காலை 6 மணி முதலே பிரதான அருவியில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பிரதான அருவியில் குவிந்து உல்லா குளியல் போட்டனர்.
