கடலூர்,

கடலூரில், நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர் நகர திமுக கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அவைத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான வருகிற 1–ஆம் தேதி அன்று கடலூர் நகர பகுதிகளில் கொடியேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, ரத்ததான முகாம் நடத்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரான கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

இந்த போராட்டத்தில் நகரத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் திரளாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் நடராஜன், இளைஞரணி சுந்தர், வக்கீல் சிவராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.