இலங்கை அருகே உருவாகி  உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்க இருப்பதால், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இந்த ஆண்டு போதுமான அளவு வட கிழக்கு பருவமழை பொழியாததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. தற்போது பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்த நிலையில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி  உள்ளது.இதனால் தமிகத்தில் தென் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன்  செய்தியாள்களிடம் பேசினார். அப்போது இந்திய கடல் பகுதியில் இலங்கைக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து நாளை  குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும் என கூறினார்.

இதனால்  தமிழகத்தின் தென் பகுதியில் பல இடங்களில் நாளை மிதமானது முதல் கனமழை வரை பெய்யும். அதன் பிறகு 24 மணி நேரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த மண்டலமாக மாறும். இதனால் தமிழகத்தில் தென் பகுதியில் நாளை மறுநாளும் அநேக இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சில நேரங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று தெரிவித்த பாலச்சந்திரன், மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளா கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிக்கு செல்லவேண்டாம் என்று  எச்சரித்தார்.