அதிரடியாக உயர்ந்த தக்காளி விலை..! ஒரே நாளில் 30 ரூபாய் அதிகரித்து 160ரூபாய்க்கு விற்பனை- காரணம் என்ன.?
தக்காளி விலை கடந்த சில தினங்களாக சற்று குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஒரே நாளில் 30 ரூபாய் அதிகரித்து சில்லரை விற்பனையில் 160 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

கிடு கிடு வென உயர்ந்த தக்காளி விலை
தங்கத்தைப்போன்று தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் தினந்தோறும் திணறி வருகிறார்கள். கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலையானது நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 50 ரூபாயை கடந்த தக்காளி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சதம் அடித்தது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் 140 ரூபாய்க்கும் சில்லரை மார்க்கெட்டில் 160 ரூபாய்க்கும் தக்காளி விற்கப்படுகிறது. இதன் காரணமாக கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சமையலில் முக்கியமாக தேவைப்படும் பொருளாக இருப்பது தக்காளியாகும்,
தக்காளி வரத்து குறைவு
ஆனால் இன்று பல்வேறு வீடுகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, காரத்தொக்கு உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. தக்காளி விலை அதிகரிக்க காரணம் தொடர்பாக கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளியினுடைய வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகளுக்கு தக்காளி விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்காததால் அவர்கள் மாற்று விவசாயத்தை செய்ய தொடங்கி விட்டனர். அதன் காரணமாகவே தக்காளி உற்பத்தி குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை அதிகரிக்க காரணம் என்ன.?
தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் போது கோயம்பேடு சந்தைக்கு 50 முதல் 80 வண்டிகள் தக்காளியை ஏற்றி வரும். ஆனால் தற்பொழுது விளைச்சல் குறைவு என்பதால் 20-30 வண்டிகள் வரை மட்டுமே வருவதாகவும் கூறியுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளொன்றுக்கு 1100 டன் தக்காளி வரும் நிலையில் தற்போது 350 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதால் தக்காளி விலை ஒரே நாளில் 30 ரூபாய் அதிகரித்து 140 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்