சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை முறையாகப் பராமரிக்காமல், சுங்க வரி வசூலில் மட்டும் ஊழியர்கள் தீவிரம் காட்டுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 50 கி.மீ. தூரத்துக்கு ஒரு சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில், காருக்கு ரூ.45 முதல் கனரக வாகனங்களுக்கு ரூ. 200 வரை பல்வேறு அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் கோடிக் கணக்கில் பணம் வசூலாகிறது. இந்த வரிப் பணத்தில் அவர்கள் பல்வேறு செலவு கணக்குகளை காட்டினாலும் மத்திய அரசின் விதிமுறையில் உள்ளது போல் சாலையை பராமரிக்க வேண்டியதும் கட்டாயம்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித தரத்தையும் பின்பற்றுவதில்லை. உதாரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் இருந்து பாலுச்செட்டி சத்திரம், தாமல் வரை சாலை விதிகள் மோசமாக பின்பற்றப்படுகின்றன.
வேலூரில் இருந்து வாலாஜாபேட்டை வரையிலும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் சென்டர் மீடியன் அமைத்து அதன் மேல் இரும்பு கிரில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாலாஜாவை தாண்டி திருபெரும்புதூர் வரை அதுபோல் ஏதும் இல்லை.
சாலையின் ஓரத்தில் முறையான தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படவில்லை. வளைவுகளில் அபாய எச்சரிக்கை, இருளில் ஒளிரும் எச்சரிக்கை கருவிகள் என ஏதும் முறையாக அமைக்கப்படவில்லை.
இவை எல்லாவற்றையும் விட வாலாஜாபேட்டையில் இருந்து திருபெரும்புதூர் வரை ஒட்டுச் சாலையாக உள்ளது. பொதுவாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார், வேன் போன்ற வாகனங்கள் சுமார் 80 முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்கின்றன.
இந்த நிலையில், ஒட்டுச் சாலையாக இருப்பதால் வாகனத்தில் பயணிப்பவர்கள் மோசமான அதிர்வுகளை உணர்கின்றனர்.
இதனால் கார், பேருந்துகளில் செல்லும் வயதானவர்கள், குழந்தைகள், ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்லும் நோயாளிகள் என அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர். சொகுசு கார்கள் அல்லாத சாதாரண கார்களில் செல்பவர்கள் உடல் வலியால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பல நாடுகளில் இருந்து நாள் கணக்கில் விமானத்தில் வரும் நபர்கள் கூட 2 அல்லது 3 மணி நேர தேசிய நெடுஞ்சாலைப் பயணத்தால் உடல் வலிக்கு ஆளாகின்றனர்.
எனவே, வரி வசூலில் காட்டப்படுவதுபோல், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பிலும் முனைப்பு காட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
