பெட்ரோல் பங்க்களில் இன்றும், நாளையும் கொள்முதல் செய்வதை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசலை இப்போதே வாங்கி ஸ்டாக் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயமாகிவிட்டது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
அகில இந்திய பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடமும், பொதுத்துறை ஆயில் நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்து வந்தது.

கடந்த 2010ம் ஆண்டு பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எவ்வளவு கமிஷன் தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் ஒரு குழு அமைத்து இந்தியா முழுவதும் மண்டல அளவில் ஆய்வு செய்தது. அதில், விளிம்பு தொகையை நிர்ணயம் செய்ய வேண்டிய விதிமுறைகளை மத்திய அமைச்சகத்துக்கு அந்த குழுவினர் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து மத்திய அரசு, 2011ம் ஆண்டு மத்திய பெட்ரோலிய அமைச்சக குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என பொதுத்துறை ஆயில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆயில் நிறுவனங்கள், குழுவின் பரிந்துரையை முழுமையாக செயல்படுத்தவில்லை.

இதனால், ஆயில் நிறுவனங்கள் கொடுக்கும் கமிஷன் தொகையில், 24 மணி நேரமும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முடியவில்லை என டீசர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. பலர் தொழில் செய்ய முடியாமல் கடனில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பலர் விற்பனை நிலையங்களை நடத்த முடியாமல் மூடிவிட்டதாகவும் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.34, டீசல் லிட்டருக்கு ரூ.1.52 விற்பனையாளர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 2011ம் ஆண்டு, சில்லறை விற்பனையாளர்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.20ம், டீசல் லிட்டருக்கு 77 பைசாவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவையும், கடந்த 5 ஆண்டுகளாக ஆயில் நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.

இதனால் ஆயில் நிறுவனங்களை கண்டித்து, தேசிய அளவில் அனைத்து மாநிலங்களின் கூட்டமைப்பான (சி.ஐ.பி.டி.) சார்பில் வேலை நேரம் குறைப்பு மற்றும் விடுமுறை அறிவிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்பேரில், தமிழத்தில் உள்ள 4,400 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் முதல் கட்டமாக அக்டோபர் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்விளக்குகள் அனைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. எனினும் கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

இதை கண்டித்து இன்றும், நாளையும் பெட்ரோல் கொள்முதல் செய்வதை நிறுத்தி, பங்க் உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போராட்டங்கள் அனைத்தும் பெட்ரோலிய சில்லறை விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தான் தவிர, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த அல்ல என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.