மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை முற்றிலும் நிரம்பியது. இதையடுத்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மாயனூர் கதவனை பரந்து விரிந்த அணை என்பதால் தண்ணீர் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மாயனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. மாயனூர் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.


மேலும் கரையோர பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.


இந்த நிலையில் ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 50,000 ஆயிரம் கனஅடி தண்ணீரும், அமராவதி ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட 25,000 கன அடி தண்ணீரும் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் அருகே காவிரி ஆற்றில் கலந்தன. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவானது 2 லட்சத்து 25 ஆயிரம்  கனஅடியாக இருந்தது.  ஈரோடு பகுதியில் இருந்து 75 ஆயிரம் கன அடி நீர் தற்போது தகவணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மாயனூர் கதவணையில் மொத்தம் 98 கதவுகள் உள்ளது. இதில் 78 கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாயனூர் கதவணையில் இருந்து இன்று 3 லட்சம் கனஅடி நீர் திறந்துவி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரிவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர்ல் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் தற்போது கூடுதலாக திறந்துவிடப்படும் தண்ணீரால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.