To run additional state buses - students and parents request
விருதுநகர்
அருப்புக்கோட்டையில் இருக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்குக்கு கல்லூரி நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் அரசு கலைக் கல்லூரி கடந்த ஐந்து மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இந்தக் கல்லூரிக்கு அனைத்து மாணவர்களுமே சுற்றியுள்ள ஊர்களிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து பின்னர் பேருந்தைப் பிடித்துதான் வரவேண்டுமாம்.
இக்கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கும் மாணவர்கள் அதே நேரத்தில்தான் பேருந்தைப் பிடிக்கின்றனர். இரண்டு கல்லூரிகளுமே காலை 9 மணிக்கு தொடங்குகின்றன என்பதால் இந்த மாணவர்கள் சிரமம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
ஆனால், காலை 8 முதல் 9 மணி வரை மூன்று தனியார் பேருந்துகளே இக்கல்லூரிகள் வழியாக இயங்குகின்றன. அரசுப் பேருந்துகள் எதுவும் அந்த நேரத்தில் இயக்கப்படாததால் மாணவர்கள் தனியார் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதிலும், மாணவிகள்தான் அதிக சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே, காலை 7.30 முதல் 9 மணி வரை இந்த வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
