கிருஷ்ணகிரி

பெண்களுக்கான முழு சுதந்திரத்தையும், உரிமைகளையும் போராடி பெற வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா, கொண்டாடப்பட்டது. அந்தக் கல்லூரியின் முதல்வர் சந்திரசேகன் தலைமை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா கலந்துகொண்டு பேசியது: "பெண்களை சுயமாக சிந்தித்து செயல்பட பெற்றோர்கள் அணுமதிக்க வேண்டும்.  

பெண்களுக்கு 10 சதவீத சுதந்திரமே கிடைத்துள்ளது.  முழு சுதந்திரத்தைப் பெற பாடுபட வேண்டும். பெண்களுக்கு என பல உரிமைகள் உள்ளன.  அவற்றை பெற போராட வேண்டும். இந்த போராட்டத்துக்கு துணை நிற்கும் ஆண்களுக்கு நன்றி கூற வேண்டும்.  பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேறுபாடு கிடையாது" என்று அவர் கூறினார்.

அதேபோன்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் சௌ.கீதா தலைமை வகித்தார். 

கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதவள்ளி,  வழக்குரைஞர் அமுதா குணசேகரன், ஒசூர் நரேந்திரா நம்பிக்கை நட்சத்திர காப்பகத்தின் நிர்வாகி ரேவதி, ஓட்டுநர் பவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பல்வேறு துறைகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் மகளிர் குறித்து விழாவில் எடுத்துரைக்கப்பட்டது.

சிவாகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் பரிதா நவாப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  கல்லூரியின் தாளாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.