மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஷரீஅத் மாநாட்டில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் பொதுசிவில் சட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஜின்னா திடலில் மஜ்லிஸுல் உலமா அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, ஜமாத்துல் உலமா சபை மாவட்டத் தலைவர் டி.ஜே.எம். ஸலாஹூத்தின் ரியாஜி தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.ஏ.எஸ். முஹம்மதுஅபுபக்கர், முன்னாள் பேரவை உறுப்பினர் வி.எஸ்.டி. சம்சுல்ஆலம், பொறியாளர் எஸ்.கே. செய்யதுஅஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை மஸ்லிஸுல் உமா அமைப்பின் தலைவர் பி.ஏ. காஜாமுயீனுத்தீன் தொடங்கிவைத்துப் பேசினார். முன்னதாக திக்ர், துவா ஓதப்பட்டது.
தீர்மானங்கள்: முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றி பொது சிவில் சட்டம் கொண்டு வருவது சிறுபான்மை முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் நடவடிக்கை ஆகும். இந்த சட்டத்தை கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில், சென்னை மந்தைவெளி தலைமை இமாம் கே.எம். முஹம்மது இல்யாஸ், சென்னை அடையாறு தலைமை இமாம் எம். சதீதுத்தீன், தமிழக மஸ்ஜிதுகள் கூட்டமைப்பின் தலைவர் எம்.சிக்கந்தர், மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி, எம்.கே.எம். முஹம்மதுஷாபி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எல்.கே.எஸ். மீரான்முகைதீன், எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் கே.எஸ். சாகுல்ஹமீது உஸ்மானி உள்ளிட்டோர் பேசினர்.
அமைப்பின் செயலர் ஐ.முஹம்மதுமைதீன் உஸ்மானி வரவேற்றார். பொருளாளர் எம்.ஏ.ஷாஹ்மதார்பாகவி நன்றி கூறினார்.
