தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாணப் போராட்டம்
குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது முக்கிய கோரிக்கையான மத்திய அரசு 2022 சட்ட மசோதா திருத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும், பென்ஷன் ஓய்வூதியர்களுக்கு 10% உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை தடுத்து நிறுத்தி வைத்துள்ளார்கள். அதனை உடனடியாக கொடுக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் கோவை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை தியாகராஜ நகரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். அதேபோல் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கருப்பு முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனர் போராட்டத்தின் போது கோரிக்கைகளை விரைந்து அமல்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்