காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்களின் உடமைகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால், கடந்த 30 நாட்களாக, தமிழக – கர்நாடகா எல்லையான ஓசூர் வரை மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் 30 நாட்களுக்கு பின், தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மற்றும் கார்கள் கர்நாடகாவுக்கு இயக்கப்படுகின்றன.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக இடையே கடுமையான மோதல் உருவாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவிலும், கர்நாடகாவிற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இரு மாநிலங்கள் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பஸ்கள் எல்லைப்பகுதியான ஜூஜூவாடி வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பாதுகாப்பு கருதி தமிழக பதிவெண் கொண்ட வானங்கள் ஏதும் கர்நாடகாவுக்குள் இயக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதையடுத்து, 30 நாட்களுக்கு பிறகு தமிழக லாரிகள் மற்றும் கார்கள் கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் செல்லும் வாகனங்களுக்கு, மாவட்ட எஸ்.பி., தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.