TN strike

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போலீஸ் பாதுகாப்புடம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழகத்திலும் கடந்த 42 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று காலை முதல் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வணிகர்கள் அமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.அதே நேரத்தில் பணிமனைகளில் இருந்து பேருந்துகளை எடுக்க விடாமல் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்வர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கேரள,கர்நாடக எல்லைப் பகுதிகளில் அந்தந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் லட்சக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.தனியார் பேருந்துகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்காத வகையில், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சாலை மறியல் மற்றும் வன்முறை சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் எச்சரித்துள்ளது. 

இதே போன்று புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.