எந்த வைரஸ் வந்தாலும் தமிழக மக்களை ஒன்றும் பண்ணாது.. பயப்பட வேண்டாம்..அடித்து கூறும் அமைச்சர் மா.சு..
தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால் புதிய கொரோனா வைரஸ் வந்தாலும் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால் புதிய கொரோனா வைரஸ் வந்தாலும் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற “ஹீமோபீலிய” தினவிழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 32 அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 87.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான பணியினர் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, கோவை அரசு மருத்துவ கல்லுாரி டீன் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில், ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இதுவரை தமிழகத்தில் 1,800 பேர் ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் மட்டும், 360 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பும் 22க்கும் கீழ் குறைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. மாநிலத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 92.38 % பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 77.28 % பேரும் செலுத்தியுள்ளனர் என்று கூறினார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. எனவே மூன்றாம் தவணை தடுப்பூசி அரசு மருத்துவனைகளில் இலவசமாக செலுத்த வேண்டுமென, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே தற்போது பரவும் கொரோனா வைரஸை விட, 10 சதவீதம் வேகமாக பரவும் தன்மைக் கொண்ட 'எப்சிலோன்' எனும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், லண்டனில் 600க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை அந்த புது வைரஸ் பாதித்துள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி, 88 சதவீதம் பேருக்கு அதிகரித்துள்ளதால் புதிய வைரஸ் வந்தாலும் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் கூறினார்.
மேலும் மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ படிப்பிற்கான இடங்களை வீணடிக்காமல் விரைவில் நிரப்ப மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் முககவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற செயல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.